காடுகளை அழிப்பதனால் ஏற்படும் விளைவுகளை விவாதித்து எழுதுக.
'காடுகள் இல்லாத ஊரிலே குடியிருக்க வேண்டாம்'
'குடியிருக்க வீடுகள் கட்ட காடுகளை அழிக்காவிடில் வேறு என்ன செய்வீர்?'
மேற்கண்ட இரு வரிகளும் இத்தலைப்பையொட்டி நம்மைச் சிந்திக்கத் தூண்டுகின்றன. நம் வீட்டைச் சுற்றி முன்பிருந்த காடுகள் இப்பொழுது இல்லாமல் போனதைப் பற்றி சமூகம் அக்கறை கொள்வதே இல்லை. நம் முன்னேற்றத்திற்காகக் காடுகளை அழிப்பதில் நன்மைகளும் தீமைகளும் விளைகின்றன.
காடுகளை அதிகம் அழிப்பதால் மனிதர்கள் சுவாசிக்கப் பிராணவாயு இல்லாமல் போகின்றது. நாம் சுவாசிக்கும் காற்றான பிராணவாயுவைத் தாவரங்களிடமிருந்துதான் பெற முடியும். காடுகளை அழிப்பதால் நமக்கு வேண்டிய தூய்மையான காற்று கிடைக்காமல் போகின்றது. இதனால், தூய்மையான காற்று கிடைக்காமல் மனிதர்களின் சுகாதாரம் பாதிக்கப்படும்.
மேலும், காடுகளை அழிப்பதால் மிருகங்களுக்கு வசிப்பிடங்கள் இல்லாமல் போகின்றன. காட்டில் வாழும் குரங்குகளும் பாம்புகளும் என இன்னும் பல விலங்குகளும் நம் வீட்டை நோக்கி வருவதுண்டு. பள்ளிக்கூடங்களில் பாம்புகளின் தொல்லைகள் அதிகரித்துள்ளதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். ஆகவே, காடுகளை அழிப்பதால் மிருகங்களின் வசிப்பிடங்களும் சேர்ந்து அழிகின்றன. இதனால், அவை உயிர்வாழ முடிவதில்லை.
இருப்பினும், காடுகளை அழிப்பதனால் மனித குலத்திற்கும் நாட்டிற்கும் நன்மையையும் ஏற்படுகின்றது என்றால் மிகையாகாது. கிராமங்களிலும் ஆற்றோரங்களிலும் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த அவர்களுக்கான புதிய குடியிருப்புகளைக் கட்டுவதற்குக் காடுகள் அழிக்கப்படுகின்றன. இதனால், ஆற்றோரங்களில் வாழ்ந்து நோய்வாய்ப்பட்டு இறந்துபோகும் மனிதர்களைக் காப்பாற்ற முடிகிறது.
மேலும், காடுகளை அழிப்பதனால் மனிதர்களுக்குத் தேவையான போக்குவரத்து வசதிகளை உருவாக்க முடிகிறது. இன்றைய நவீன வசதிக்கேற்ப தொழில்நுட்பம் சார்ந்த விரைவு இரயில் சேவை, மின்சார இரயில் சேவை போன்றவற்றை உருவாக்க முடிகிறது. காடுகளிலுள்ள நிலங்களை அழித்துதான் இதுபோன்ற தேவைகளைப் பூர்த்தி செய்ய முடிகின்றன. இதனால், நாடு வளர்ச்சி அடையும். மேலும், சுற்றுலாத் துறையும் மேம்படும்.
ஆகவே, இந்த உலகின் மிகப் பழமை வாய்ந்த இயற்க்கை வளமான காடுகளை அழிப்பதனால் நன்மைகளும் தீமைகளும் விளைகின்றன என்பது தெரிய வருகின்றது. ஏனெனில், அரசாங்கம் சில காடுகளைப் பாதுகாத்தும் வருகின்றன. அந்த நடவடிக்கை தொடர வேண்டும். காடுகள் இல்லையேல் மனிதர்கள் உயிர்வாழ முடியாது என்கிற உண்மையை அனைவரும் உணர வேண்டும்.
Comments