குமரனின் வீடு
"இதுதான் குமரன் வீடு...வாங்க போகலாம்," என அமுதா கூறியதும் எல்லோரும் ஒரு கணம் மிரண்டு போனார்கள்.
சிவா கையில் பிடித்திருந்த லாந்தர் விளக்கை உயர்த்திப் பிடித்தான். வெளிச்சம் அவ்விடத்தை ஊடுருவிச் சென்றது.
"பேய் வீடு மாதிரிலே இருக்கு?" என சரண் மனத்தில் நினைத்துக் கொண்டே பயந்தவாறு அவர்களுக்குப் பின்னால் தயங்கி நடந்தான்.
"அமுதா உனக்கு நிச்சயமா தெரியுமா? இது குமரன் வீடு மாதிரி இல்லயே?" என வார்த்தைகள் நடுங்க சிவா வினவினான்.
"டேய்ய்! பயப்படாதீங்க. அவன் கொடுத்த முகவரி இதுதான். அப்படின்னா இதுதானே வீடு?" என அமுதா சட்டென கோபத்தால் வெடித்தாள்.
"நாங்க ஒன்னும் பயப்படல, நாங்கலாம் பேய்க்கே 'பேட்மிண்டன்' சொல்லிக் கொடுப்போம்," எனக் கூறிவிட்டு விரிந்த கண்களுடன் சரண் அக்காட்டுப் பாதையைக் கவனித்தான்.அவர்கள் மூவரும் குமரனின் வகுப்பு நண்பர்கள். இன்று தனக்குப் பிறந்தநாள் வீட்டுக்கு வருமாறு குமரன் அனைவரையும் அழைத்திருந்தான்.
"சிவா டே! இது பிறந்தநாளுக்கு அழைச்ச மாதிரி தெரில," என சரண் எச்சிலை விழுங்கினான். அவன் குரலில் பயம் கலந்திருந்தது.
மூவரும் வெளிச்சத்தின் துணையுடன் இருண்டு கிடந்த அவ்வீட்டின் முன் வந்து நின்றனர்.
"குமரா! குமரா!" என அமுதா சத்தமாக அழைத்தாள்
சிவா லாந்தர் விளக்கை அவ்வீட்டைச் சுற்றி காட்டினான். வெளிச்சம் அங்குமிங்குமாகப் பரவியது.
"என்ன அமுதா எல்லாம் பழசா இருக்கு? ஆள் இருக்குற மாதிரி இல்லயே?" என சிவா நடுங்கியக் குரலில் கூறினான்.
"குமரா! டேய்! குமரா!" அமுதா மேலும் வேகமாகக் கூவினாள்.
ஆள் நடமாட்டமே தென்படவில்லை. சட்டென அமுதா வைத்திருந்த கைத்தொலைப்பேசி அலறியது.
"அமுதா! நான் குமரன் பேசுறேன். மன்னிச்சிடுங்க. உங்களுக்குக் கொடுத்த முகவரிலெ ஜாலான் செஜாதினு போடுறதுக்கு,ஜாலான் செஜாத்தரானு எழுதிட்டேன். அங்கப் போயிடாதீங்க. அது ஒரு பாலைஞ்ச வீடு. சரி சீக்கிரம் வந்துருங்க," எனக் கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்தான்.
"டேய்ய்ய் ஓடுங்கடா!" எனக் கத்திக் கொண்டே அமுதா முதலில் ஓட சிவாவும் சரனும் தலைதெறிக்க 'உசேன் போல்ட்' வேகத்தில் ஓடினர்.அன்றைய தினத்தை அவர்களால் மறக்கவே முடியவில்லை.
Comments