துரித உணவுகளால் தீமையே விளைகின்றன என்பதை - ஆதரித்து எழுதுக
நாகரிக வளர்ச்சிக்கேற்ப நமது உணவு முறைகளும் மாறிக்கொண்டே வருகின்றன. அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியில் துரித உணவுகளும் பலவிதமாக அறிமுகம் செய்யப்பட்டு மக்களை காந்தம் போல் ஈர்க்கின்றன. துரித உணவு என்பது எளிதில் கெடாமலும் விரைவில் தயாரிக்கக் கூடியவகையாக உருவாக்கப்பட்ட உணவு பொருள்களாகும். துரித உணவுகளினால் தீமையே விளைகின்றன என்பது உறுதி.
துரித உணவுகளை அதிகம் உண்பதால் நம் உடலுக்குப் பல நோய்கள் உண்டாகும். துரித உணவுகள் கெடாமல் இருக்க பல இரசாயனப் பொருள்கள் பயன்படுத்தி தயாரிக்கப்படுகின்றன. இதனால், இதை உண்பவர்களுக்கு வயிறு வலி, குடல் புற்று நோய், உடல் பருமன் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன.
மேலும், பொட்டலங்கள் மற்றும் டின்களில் அடைக்கப்படும் துரித உணவுகளை உண்பதால் உண்டலுக்குத் தீமைகள் விளைகின்றன. டின்களில் அடைக்கப்படும் உணவு பொருட்களில் நச்சுத் தன்மை அதிகம் உள்ளன. இதனால், உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்து பல்வேறு நோய்கள் ஏற்பட காரணமாக உள்ளன.
மேலும், தற்போது சிறுவர்களிடையே உடல் பருமன் பிரச்னை ஏற்படுவதற்குத் துரித உணவே முக்கிய காரணம் என ஆணித்தரமாகக் கூறலாம். வேலைக்குச் செல்லும் பெற்றோர்கள் நேரப்பற்றாக்குறையால் தங்களின் பிள்ளைகளுக்கு எளிதில் கிடைக்கக் கூடிய துரித உணவுகளை வாங்கிக் கொடுக்கின்றனர். பிள்ளைகள் துரித உணவுகளை அதிகம் உண்பதால் உடலில் கொழுப்புச் சத்துகளும் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இதனால், சிறு வயதிலேயே புற்று நோய், இருதய நோய், நீரழிவு நோய், தொற்று நோய் என பாதிப்படைகின்றனர்.
இறுதியாக, 'சுவரை வைத்துதான் சித்திரம் வரைய முடியும்' என்பதற்கேற்ப உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் எண்ணங்களுக்குச் செயல்வடிவம் கொடுக்க முடியும். எனவே, 'உணவே மருந்து, மருந்தே உணவு' என்பதற்கேற்ப நம் உண்ணும் உணவு உடலுக்கு ஆரோக்கியத்தைக் கொடுப்பவையாக இருப்பது அவசியம்.
Comments