மாணவர்கள் விளையாட்டில் ஈடுபடுவதால் நன்மையே - ஆதரித்து எழுதுக
"ஓடி விளையாடு பாப்பா... நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா" என்பதற்கேற்ப மாணவர்கள் அவசியம் விளையாட்டில் ஈடுபட வேண்டும். இன்றைய அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியில் மாணவர்கள் விளையாட்டில் ஈடுபடுவது குறைந்து கொண்டே வருகின்றது. மாணவர்கள் விளையாட்டில் ஈடுபடுவதால் நிறைய நன்மையே விளைகின்றன.
மாணவர்கள் விளையாடுவதால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். தினமும் விளையாட்டில் ஈடுபடுவதால் உடலில் இரத்த ஓட்டம் சீராக இயங்கும். 'உடலினை உறுதி செய்' என்பதற்கேற்ப னாய் நொடியின்றி ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் வாழ முடியும். விளையாடுவதால் உடலிலுள்ள அனைத்து உறுப்புகளும் ஒன்றோடு ஒன்று இணைந்து சிறப்பாகச் செயல்பட துணைப்புரியும்.
விளையாடடில் ஈடுபடுவதால் மாணவர்களிடையே 'இலைமறை காய் போல' மறைந்திருக்கும் திறமைகளை வெளிப்படுத்த முடியும். மாணவர்கள் பூப்பந்து, காற்பந்து, ஓட்டப்பந்தயம் போன்ற போட்டிகளில் கலந்து கொண்டு தங்களின் திறமைகளை வெளிக்கொணர முடியும். இதனால், நாட்டிற்கும் வீட்டிற்கும் பெருமை சேர்க்க முடியும்.
அடுத்து, விளையாட்டுகளில் ஈடுபடுவதால் மாணவர்களிடையே நற்பண்புகளை வளர்க்க முடியும். மாணவர்கள் விளையாட்டில் ஈடுபடும் போது விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை, ஒற்றுமை, விடாமுயற்சி, தலைமைத்துவம் போன்ற நற்பண்புகளைக் கற்றுக் கொள்கின்றனர். நல்ல குடிமகனாக வளர விளையாட்டு பெரிதும் பங்காற்றுகின்றது என்றால் அது மிகையாகாது.
மேலும், விளையாட்டில் ஈடுபடுவதால் நன்மைகளே விளைகின்றன என உறுதியாகக் கூறலாம். எனவே, சிறுவயதிலிருந்தே மாணவர்கள் அவசியம் விளையாட்டில் ஈடுபட வேண்டும். நாட்டின் வளர்ச்சிக்கு விளையாட்டு முக்கிய பங்காற்றுகின்றது என்பதில் சிறிதளவும் ஐயமில்லை.
Comments