ஆறுவது சினம்

     



    மனிதனின் உணர்வுகளில் ஒன்றுதான் கோபம். கோபம் என்கின்ற உணர்ச்சியை வளரவிட்டால் அது வளர்த்தவனையே கொள்ளும் என்பார்கள். நமது குடும்பத்தில் ஏற்படுகின்ற பெரும்பாலான துன்பங்களுக்குக் கோபமே காரணமாக அமைகின்றது என்றால் மிகையாகாது.

                        தன்னைத்தான் காக்கின் சினம்காக்க காவாக்கால் 

                        தன்னையே கொள்ளும் சினம்                      (305)

என்பது வள்ளுவன் வாக்கு. எனவே, நாம் கோபம் எனும் உணர்ச்சியை அடக்கி ஆள அறிந்திருக்க வேண்டும். யூ.ஸி இர்வின்னை சேர்ந்த ரேமண்ட் நோவாகோ, 1975லிருந்து கோபம் குறித்து மிகுதியான இலக்கியங்களை படைத்துள்ளார். அவர் கோபத்தை மூன்று நிலைகளில் வகைப்படுத்திக் காட்டுகிறார். அவையாவன அறிவைப் பாதிக்கக்கூடிய நிலை, உடலைப் பாதிக்கக்கூடிய நிலை, நடத்தையைப் பாதிக்கக்கூடிய நிலை என்பனவாகும். கோபம் என்பது ஓர் ஆக்கிரமிப்பு உணர்ச்சியாக நம் அறிவிலும், உடலிலும், நடத்தையிலும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியதாகும். ஒரு மனிதன் தன்னை அசச்சுறுத்தும் வேறொரு வெளி சக்தியை எதிர்ப்பதற்காக எடுக்கின்ற முடிவே மூளையின் தேர்வான கோபம். கோபத்தின் வெளிப்பாடுகளை முகப் பாவனைகள், உடல், மொழி, மூர்க்கத்தனமான நடவடிக்கைகள் ஆகியவற்றால் கண்டறியலாம். சான்றாக, அதிக சப்தம் எழுப்புவது, பற்களை நற நறவென கடிப்பது, குறைப்பது போன்றவையாகும். 

    ஒருவருக்குக் கோபம் பல காரணங்களால் ஏற்பாண்ட வாய்ப்புண்டு. குடும்பப் பொருளாதார சிக்கலுக்கு ஆளாகி அதிலிருந்து வெளிவர முடியாதபோது கோபம் ஏற்படுகின்றது. குடும்பத்தில் கணவன் மனைவி இடையே புரிந்துணர்வும் ஒத்துழைப்பும் இல்லாதபோது கோபம் மேலோங்குகிறது. தொடர்ந்து, ஈன்றெடுத்த பிள்ளைகளின் மூலம் ஏற்படும் மன உளைச்சலினாலும் கோபம் தூண்டப்படுகின்றது.

    கோபத்தினால் பல வகைகளில் பாதிப்புகள் ஏற்படுகின்றன. ஒருவர் நோய்வாய்ப்படுவதற்குக் கோவம் மூல காரணமாக அமைகின்றது. இருதய நோய், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய் போன்ற கொடிய நோய்களுக்கு விரைவில் ஆளாக நேரிடும். கோபம் ஏற்படும்போது நமக்கோ பிறருக்கோ உடல் காயம், உயிர்ச் சேதம் ஏற்பட வாய்ப்புண்டு. மேலும், கோபத்தினால் குடும்ப நிம்மதி சீர்குலைவதோடு உறவுகளில் விரிசல் ஏற்படும். கோபத்தினால் அறிவிழந்து செய்கின்ற செயல்களினால் துன்பத்திற்கு ஆளாகி, அதனை எண்ணி வருந்தியவர்களை நாம் கண்கூடாகப் பார்த்திருக்கிறோம். 

    கோபம் என்கின்ற உணர்ச்சியை அடக்கி ஆழத் தெரிந்தவனே உலகை ஆளுகின்றான். கோபத்திலிருந்து விடுபட பல வழிகள் உண்டு. நாம் பேசும்போது நிதானமாகவும் அறிவுப்பூர்வமாகவும் சிந்தித்துப் பேசினால் பிறர் நம் மீது கோபப்படமாட்டார்கள். மனமும் உடலும் அமைதிப் பெற மூச்சுப் பயிற்சி, யோகப் பயிற்சி, நடைப் பயிற்சி,உடற்பயிற்சி போன்றவற்றைச் செய்ய வேண்டும். இதனால், உடலையும் உள்ளத்தையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதோடு மகிழ்ச்சியான வாழ்க்கைச் சூழலை நுகர முடியும். மேலும், கோபம் மேலோங்கும்போது சிறிது நேரம் ஒய்வு எடுத்துக் கொண்டு மாற்றுச் சிந்தனைக்கு வழிவிடலாம். சில வேளைகளில் கோபத்தைத் தூண்டும் சூழ்நிலைகளிலிருந்து விடுபட அவ்விடத்தைவிட்டு அகன்றுவிடுவது சாலச் சிறந்தது. உளவியல் நிபுணர் ஏபரம் ஃபெர்னாண்டாஸ் அவர்கள் கோபத்தைக் குறைப்பதற்கு அறிபுல நடத்தை சிகிச்சை  அறிமுகப்படுத்தியுள்ளார். இப்பயிற்சி அறிவாற்றல் மற்றும் நடத்தை சார்ந்த வழிமுறைகளைக் கொண்டு மணத்தைச் சாந்தப்படுத்துவதுடன் கோபத்தைக் கையாளும் வழிமுறைகளை நமக்குப் புலப்படுத்தவல்லது. இப்பயிற்சியின்வழி ஒருவர் தனக்கு வருகின்ற கோபத்தைத் தடுக்க முடியும். மேலும், கோப உணர்வை எளிதில் கையாளும் திறனையும் பெறுவர். 

    சுருங்கக்கூறின், கோபம் எனும் சூறாவளியிலிருந்து விடுபட்டு அமைதி எனும் தென்றலில் தவழ்ந்து வாழ முற்படுவோம்; வாழ்க்கையைச் சுவர்க்கமாக மாற்றிக் கொள்வோம். 

Comments

Popular posts from this blog

கடல் - கட்டுரை (Kadal - katturai)

காடுகளை அழிப்பதனால் ஏற்படும் விளைவுகளை விவாதித்து எழுதுக.

பணி ஓய்வு உரை (pani ooyvu urai)