கூட்டுக் குடும்பம்

 


    ஒருவனின் வாழ்க்கையில் குடும்பம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஒரு தாய் வயிற்றிலிருந்து பிறந்த உடன்பிறப்புகள், மனைவி மற்றும் குழந்தைகள் என அனைவருமே ஒரு மனிதனுக்கு மிக முக்கியமானவர்கள். நம் வாழ்க்கையின் இன்பத்திலும் துன்பத்திலும் நம்முடன் முதலில் கைக்கொடுத்து நிற்பது நம் குடும்பத்தார் மட்டுமே. அனைவரின் வாழ்க்கையிலும் குடும்பத்தைவிட பெருஞ்செல்வம் வேறொன்றும் கிடையாது. 

    இன்றைய காலக் கட்டத்தில் குடும்ப அமைப்பு மாற்றிக்கொண்டே வருகிறது. முன்பெல்லாம் பெரிய கூட்டுக் குடும்பமாக ஒரே வீட்டில் வசித்து வந்தார்கள். ,ஆனால், இன்றைய நவீன யுகத்தில் அத்தகைய குடும்பச் சூழல் அடியோடு மாறிவிட்டது. இப்போதுள்ள குடும்பங்கள் யாவும் தனிக் குடும்பம் என்ற பெயரில் சிறிய குடும்பமாகிவிட்டது. இந்தப் பெரிய மாற்றங்கள் ஏற்பட என்ன காரணம் என்று நாம் தெரிந்துகொள்ள வேண்டாமா! இன்றையக் காலக் கட்டத்தில் கூட்டுக் குடும்பம் என்பது பல பேருக்குப் பெரிய சுமையாகவும் பிரச்சனையாகவும் மாறிவிட்டது என்றும் கூறலாம். கூட்டுக் குடும்பத்தில் வாழ்வதில் சில ஆதாயங்கள் இருக்கின்றன. அதே வேளையில் அதில் பல குறைகளும் இருக்கத்தான் செய்கின்றன. 

    தொடர்ந்து, கூட்டுக், குடும்பத்தில் வாழ்வதால் ஏற்படும் சில சிக்கல்களைக் காண்போம். கூட்டுக் குடும்பம் என்று வந்துவிட்டால், வீட்டின் மூத்தவரே அந்தக் குடும்பத்தின் தலைவராகப் பொறுப்பேற்று இருப்பார். அவர் மிகவும் வயதானவராகவும் கண்டிப்புத் தன்மையுடையவராகவும் விளங்குவார். இவ்வகைக் குடும்ப அமைப்பில் வாழையடி வாழையாகக் கடைப்பிடித்து வரும் பழமையான கலாச்சாரங்கள் பின்பற்றப்படும். இஃது அங்கு வாழும் பலருக்கும் எதிர்மறையான மனநிலையை உண்டாக்கும். பழமை விரும்பியான குடும்பத் தலைவரின் செயல்பாடுகள் கூட்டுக் குடும்பத்தில் நிலவும் பிரச்சனைகளுக்கு முதன்மை காரணியாகும். எப்போதுமே குடும்ப உறவினர்கள்தான் குடும்பத் தலைவருக்காக விட்டுக்கொடுத்து வாழ வேண்டியிருக்கும். விட்டுக்கொடுத்தல் மனப்பான்மையே கூட்டுக் குடும்பத்தில் வாழ்வதற்கான பலமாகவும் கருதப்படுகிறது.

    தொடர்ந்து, கூட்டுக் குடும்பத்தில் உள்ள மற்றொரு முக்கியப் பிரச்சனையானது தொடக்க முயற்சி இல்லாமை. கூட்டுக் குடும்பத்தில் முயற்சி எடுப்பதற்குப் பல வழிகள் உள்ளதால் யாருமே தொடக்க முயற்சி எடுக்க சிரத்தைக் காட்டுவதில்லை. இப்படிப் பொறுப்பைச் சுமக்க யாரும் முன்வராததால் இவ்வகை அமைப்பில் வாழ பலருக்குப் பிடிப்பதில்லை. கூட்டுக் குடும்பத்தில் அமைதி நிலை வேண்டும் என்று ஒரு சில உறவுகள் விட்டுக்கொடுத்துப் போகின்றன. ஆனால், சில கூட்டுக் குடும்பங்களில் குடும்ப உறுப்பினர்கள் அனைவருடைய கருத்துகளையும் கேட்டுக் கலந்துரையாடிய பின்னரே முடிவுகள் எடுக்கப்படுகின்றன. இதனால், குடும்பத்தில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வர முடியும். அதனுடன் பல்வேறு புதிய முயற்சிகளும் மேற்கொள்ள முடியும். 

    கூட்டுக் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகளில் பெரும்பாலும் பாதிப்படைவது அங்குள்ள பெண்களே. பொதுவாகக் கூட்டுக் குடும்ப அமைப்பில் பெண்கள் அனைவரும் அடுப்பங்கரையில் அடைப்பட்டுக்கிடப்பதால் அவர்களின் திறமைகள் எல்லாம் புல்லுக்கு இறைத்த நீர் போன்று வீணாய்ப்போகின்றன. இப்படிப்பட்ட பிரச்சனைகளை அவர்கள் சந்திப்பதால் கூட்டுக் குடும்பத்தில் வசிக்கும் பெண்கள் அந்தச் சூழலைவிட்டு வெளிவர விரும்புவதுண்டு. கூட்டுக் குடும்பச் சூழலோடு ஒன்றிணைந்து வாழ்வதிலும் பெண்கள் சிரமப்படுவார்கள். ஆயினும், பல கூட்டுக் குடும்பங்களில் பெண்களே தெய்வமாகப் போற்றப்படுகின்றனர். மேலும், கூட்டுக் குடும்பத்தில் ஒருவருக்கு நேரும் துன்பத்தை அனைவரும் பகிர்ந்து அப்பிரச்சனைக்கு உடனடி தீர்வு காண முற்படுவர். இதனால், குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். 

    அடுத்ததாக, இளம் தம்பதிகளுக்குக் கூட்டுக் குடும்பத்திலுள்ள பெரிய பிரச்சனை என்னவென்றால் அவர்களுக்குப் போதிய தனிமை கிடைப்பதில்லை. அதிகமான நேரத்தைக் கூட்டுக் குடும்ப உறுப்பினர்களுடன் கழிப்பதால் தனிமையில் நேரத்தைப் போக்கிட வாய்ப்புகள் கிடைப்பதில்லை. கூட்டுக் குடும்பத்தில் எப்போதுமே பல பேருடன் சேர்ந்து இருப்பதால் தனிமையில் செயல்பட முடியாது. கூட்டுக் குடும்பத்தில் இருந்தாலும்கூட மனைவி மற்றும் குழந்தைகளுடன் சிறிது நேரமாவது செலவிட வேண்டும். தனிமை என்பது இனிமையென்று பலரும் கருதுகிறார்கள். ஆனால், தனிமை வெறுமையின் உச்சம் என்பதை யாரும் வருவதில்லை. ஆகையால், தனிக் குடும்பத்தைவிடக் கூட்டுக் குடும்ப உறுப்பினர்கள் அதிக மகிழ்ச்சியுடன் வாழக்கூடும்.

    மேலும், கூட்டுக் குடும்பத்தில் குடும்ப பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் அனைவருக்கும் கடமை உண்டு. இதனால், குடும்ப வாழ்வாதாரத்தையும் செலவிங்களையும் பகிர்ந்துகொள்ளலாம். ஆனால், செலவிங்களைப் பகிரும் நிலை இருப்பதை அறிந்தும் ஒரு சிலர் முறையாகத் தோள் கொடுக்காமல் சிவனே என இருப்பார்கள். இதனால், குடும்ப பொருளாதாரம் வெகுவாகப் பாதிக்கப்படும். அவரவர் கடமை மற்றும் பொறுப்புகளை ஒழுங்காகச் செய்யாமல் ஒவ்வொருவரும் மற்றவர்களைக் குறை கூறிக் கொண்டே இருப்பார்கள். இதனால், குடும்பத்தின் அமைதி சீர்குலைந்து போகும். 

    சுருங்கக்கூறின், கூட்டுக் குடும்பம் என்பது ஓர் ஆலமரத்திற்கு நிகரானது. ஆலமரத்தின் விழுதுகள் போல கூட்டுக் குடும்பத்தில் வாழும் ஒவ்வொருவரும் அம்மரத்தைத் தாங்கி நிற்க வேண்டும். அப்பொழுதுதான் கூட்டுக் குடும்பத்தை முறையாகப் பராமரிக்க முடியும். 

Comments

Popular posts from this blog

கடல் - கட்டுரை (Kadal - katturai)

காடுகளை அழிப்பதனால் ஏற்படும் விளைவுகளை விவாதித்து எழுதுக.

பணி ஓய்வு உரை (pani ooyvu urai)