முக்குளிப்பு
நாட்டின் புகழ்பெற்ற முக்குளிப்பு வீராங்கனையான பண்டேலேலா ரீனோங் ஒலிம்பிக் போட்டிகளின் மூலம் நமது நாட்டிற்கு 2 பதக்கங்களையும் உலக வெற்றியாளர் போட்டியின்வழி 4 பதக்கங்களையும் வென்று சாதனை படைத்துள்ளார். சரவாக் மாநிலத்தைச் சேர்ந்த பண்டேலேலா 10 மீட்டர் உயரத்திலிருந்து நீரில் குதிக்கும் திறன் வாய்ந்தவர். மலாயாப் பல்கலைக்கழகத்தில் படித்துப் பட்டம் பெற்ற இவர், 'புக்கிட் ஜாலில்' விளையாட்டுப் பள்ளியில் முக்குளிப்பு விளையாட்டில் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டார். தேசிய நிலையிலும், ஆசியான், ஆசியா, ஒலிம்பிக் ஆகிய போட்டிகளிலும் பல பதக்கங்களை வென்று நமது நாட்டுக்குப் பெருமை சேர்த்தவர். 2010ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 'காமன்வெல்த்' போட்டியில் தங்கம் வென்றார். 2008 முதல் 2018 ஆம் ஆண்டு வரை அனைத்துலகப் போட்டிகளில் வெற்றிக் கொடி நாட்டியுள்ள இவர், ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
பண்டேலேலா 2008ஆம் ஆண்டு ஒலிம்பிக் முக்குளிப்புப் போட்டியில் காலடியெடுத்து வைத்தபோது அவருக்கு 27ஆவது இடம்தான் கிடைத்தது. ஆனால், அவரது தீவிர தொடர் பயிற்சிகளின்வழி 2012ஆம் ஆண்டில் பெண்களுக்கான 10 மீட்டர் உயர முக்குளிப்புப் போட்டியில் வெண்கலப்பதக்கமும் 2016இல் ரியோடி ஜெனிரோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கமும் வென்றார். இப்போட்டிகளில் இவரது முக்குளிப்பு ஜோடியான லியோங் மன் யீனுடன் இணைந்தே சாகசம் புரிந்துள்ளார்.
2009இல் சிங்கப்பூரில் நடைபெற்ற தென்கிழக்காசியப் போட்டியில் பண்டேலேலா லியோங் மன் யீனுடன் இணைந்து 10 மீட்டர் உயரத்திலிருந்து நீருக்குள் குதிக்கும் முக்குளிப்புப் போட்டியிலும் தங்கப்பதக்கங்களை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
2013இல் உலக நீச்சல் போட்டியில் பண்டேலேலா, லியோங் மன் யீ இணை 10 மீட்டர் உயர முக்குளிப்புப் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றனர். 2014இல் 'க்ளாஸ்கோவில்' நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் நாட்டின் மற்றொரு முக்குளிப்பு வீராங்கனையான நூர் டபித்தாவுடன் இணைந்து 10 மீட்டர் உயர முக்குளிப்பில் வெண்கலப்பதக்கமும் அதே ஆண்டில் தென் கொரியா, இன்சிபோன் நகரில் நடைபெற்றன ஆசியப் போட்டிகளில் லியோங் மன் யீ உடன் இணைந்து வெண்கலப்பதக்கமும் வென்றார். இவரது சாதனைகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் சரவாக் நீச்சல் மையம் பெத்ரா ஜெயாவில் உள்ள நீச்சல் குளத்திற்குப் பண்டேலேலா ரினோங் நீச்சல் மையம் என்று பெயரிட்டுள்ளது.
2017ஆம் ஆண்டு புடபெஸ்டில் நடைபெற்ற உலக நீச்சல் போட்டியில் 10 மீட்டர் உயர முக்குளிப்புப் போட்டியில் சியோங் ஜூன் ஹுங் இணையுடன் சேர்த்து வெண்கலப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். அனைத்துலக அளவில் உலகத்தின் திறம் வாய்ந்த முக்குளிப்பு வீராங்கனைகளுக்கு ஈடுகொடுத்து வெற்றி பெறுவது அரிதான காரியமல்ல. ஆயினும், பண்டேலேலா அதையும் தாண்டிப் பல பதக்கங்களை வென்று சாதித்துள்ளார் என்பது பெருமைக்குரிய செய்தியாகும்.
சுருங்கக்கூறின், இவர் 2011 முதல் 2015ஆம் ஆண்டு வரை தேசிய விளையாட்டு வீராங்கனையாகத் தெரிவு செய்யப்பட்டுச் சிறப்பிக்கப்பட்டார்.
Comments