மின்வணிகம்
'திரை கடலோடியும் திரவியம் தேடு' என்று நம் முன்னோர்கள் வாய் மொழிந்துள்ளனர். ஆனால், இன்று திரை கடலோடி திரவியம் தேடுவதற்கு அவசியமற்றுப்போகிறது. இன்றைய நவீன தொழில்நுட்ப உலகில் ஒரு மூலையில் அமர்ந்து கொண்டு கணினியின்வழி பணம் ஈட்டக்கூடிய சூழல் நிலவுகிறது. நவீன உலகமயமாதலால் ஆழி போன்று பரந்து விரிந்திருந்த உலகம் ஒரு விறல் நுனியில் அடங்கி கொண்டிருக்கிறது.அதற்குக் காரணம் நாம் ஓர் இடத்தில் இருந்தவாறே சில மணித்துளிகளில் உலகில் எந்த இடத்தில் இருப்பவரிடமும் தொடர்புகொண்டு வணிகம் செய்யும் சூழலைக் குறிப்பிடலாம். இன்று உலகின் மொத்தத் தொலைத்தொடர்புகளையும் இணையம் சிறைப்படுத்தி வைத்துள்ளது எனில் அது மிகையாகாது.
இந்த இணையத்தின் பயன்பாடும் ஆதிக்கமும் உலகின் மொத்த செல்வங்களை உள்ளடக்கிய வணிகச் செயல்பாடுகளையும் விட்டுவைக்கவில்லை. இன்றைய 21ஆம் நூற்றாண்டில் வணிக மாற்றத்திற்கு வித்திட்டது உலகமயமாதல் கொள்கையாகும். பல்வேறு கட்டுப்பாடுகளையும் தடைகளையும் தகர்த்தேறிந்து உலக வணிகத்தைக் கையகப்படுத்த இணையம் பெரும் பங்காற்றி வருகிறது. பாரம்பரிய வணிகத்தில் காகிதத்தின் பயன்பாடு மிகுந்திருந்தது. மின்வணிகத்திலோ காகிதங்கள் பறந்தோடி எல்லாம் மின்னஞ்சலிலும் இணையத் தளங்களிலும் பரிமாறப்படுகின்றன.
மேலும், இன்றைய தொழில்நுடப உலகில் வளர்ச்சியடைந்த நகரங்கள் தொடங்கி சிறுதொழில் செய்துவரும் குக்கிராமம் வரையில் அனைத்து வியாபாரிகளும் இணையத்தின் மூலமாகவே வியாபாரம் செய்கின்றனர். சமூக வலைத்தளங்களின் வழியே செய்யும் வியாபாரமும் மின்வணிகம் என்று அழைக்கப்படுகின்றது. முதலாவதாக, மின்வணிகம் செய்வதற்கு ஒரு வலைத்தளத்தை உருவாக்க வேண்டும். அதில் நாம் விற்பனை செய்யும் பொருள்களின் தரத்தையும் அவற்றின் தன்மைகளையும் விவரமாகக் குறிப்பிட வேண்டும். பின்னர், நாம் விற்க விரும்பும் பொருள்களின் மாதிரியை உள்ளது உள்ளபடியே காட்டிட முப்பரிமான வசதி கொண்ட மென்பொருள்கள் இணைக்கப்பட்டிருத்தல் அவசியமானதாகும்.
மின்வணிகத்தினால் வணிகப் பொருள்களை அயல்நாட்டிற்கு எடுத்துச் சென்று விளம்பரப்படுத்தும் செலவும் நேரமும் மிச்சப்படுகிறது. மின் வணிகத் துறைக்கு எல்லை வரையறைகள் ஏதும் கிடையாது. எல்லை வரையறையற்ற இம்முறையில் இந்தப் பொருளையும் சேவையையும் விற்கவும் வாங்கவும் முடிகின்றது. மின்வணிகம் பல்வேறு வேலை வாய்ப்புகளையும் ஏற்படுத்தித் தருகிறது. வலைத்தளங்களை வடிவமைப்பது, வணிகக் கொடுக்கல் வாங்கலைக் குறித்து வைப்பது, கணினிவழி கணக்குப் பதிவு செய்வது போன்ற துறைகளில் நிபுணத்துவம் வாய்ந்திருத்தல் உலகின் எந்த மூலையிலும் பணி புரிய முடியும். இதற்கான வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாக உள்ளன.
தொடர்ந்து, கடவுச்சொற்கள்,கைரேகை, கண் கருவிழிப் பதிவு எனப் போதிய பாதுகாப்பு அம்சங்கள் மின்வணிகத்தில் பின்பற்றப்பட்டாலும் சில வேளைகளில் மின்வணிகம் ஆபத்தையும் ஏற்படுத்திவிடுகிறது. புதிதாக இம்முறையிலான வணிகத்தில் ஈடுபடுவோரும் இணையத்தள நெளிவு சுளிவுகளை அதிகம் அறிந்திறாதோரும் இச்சிக்கலில் பாதிக்கப்படுகின்றனர். மின்னட்டைகள் பயன்படுத்திக் கட்டணம் செலுத்துவதில் மூன்றாம் தரப்பினர் அழையா விருந்தினராக ஒருவரின் வங்கிக் கணக்கைச் சூறையாடும் போக்கு ஒரு மருட்டலாகவே இருந்து வருகின்றது. மேலும், பொருள் அல்லது சேவை வழங்குவதில் நம்பிக்கை மோசடி செய்வதற்கான வாய்ப்பும் அதிகம் உள்ளது. ஆகவே,இணையத்தின் வருகையால் வணிகத் துறைக்குக் கிட்டிய மாபெரும் மூலதனம் மின்வணிகமாகும். இதில் பல பாதுகாப்பு முறைமைகளைக் கடைப்பிடித்தல் மிகவும் அவசியமாகும்.
சுருங்கக்கூறின், மின்வணிகம் பல நன்மைகளை அள்ளிக் கொடுக்கும் வள்ளலாக இருந்தாலும் சில தருணங்களில் தீமைகளையும் விளைவிக்கின்றது. ஆகவே, மின்வணிக வியாபாரிகள் தங்களது மின்வணிகத் தளத்தில் பாதுகாப்பு அம்சங்களை உட்புகுத்துவது மிக அவசியமானதாகும்.
Comments