வேளாண்மை
ஒரு நாட்டின் வளர்ச்சியும், முன்னேற்றமும் அதன் பொருளாதாரம் கனிம வளம், இயற்கை வளங்களால் நிர்ணயிக்கப்படுகின்றன. உணவை உற்பத்திச் செய்வதும் கால்நடைகளை வளர்ப்பதும் வேளாண்மை ஆகும். வேளாண்மை ஒரு நாட்டின் பொருளாதாரத்தின் அச்சாணி போன்றது எனலாம். மக்களின் அத்தியாவசியமான உணவுப் பொருள்களை உற்பத்திச் செய்கிறது. நாட்டின் பணவீக்கத்தைத் தவிர்க்க வேளாண்மை உதவுகிறது. வேளாண் மூலப்பொருளால் தொழில் துறை வளர்கின்றது. வேளாண்மை ஒரு நாட்டின் பொருளாதார ஏற்றத் தாழ்வுகளைக் குறைக்கிறது.
தொடக்கக்காலங்களில் உணவைத் தேடி அலைந்த மனிதன் சமூகமாக வாழ்வதற்குக் கற்றுக் கொண்டான். மனிதன், தேவைகள் அதிகரிக்க வேளாண்மையை ஒரு தொழிலாகச் செய்யத் தொடங்கினான். தொடக்ககாலங்களில் ஆற்றோரங்களில், நீர் வளம் அமைந்த பகுதிகளில் ஆரம்பமான வேளாண்மை, உலோகத்தின் பயன்பாட்டுக்குப் பின் பல இடங்களிலும் பரவ ஆரம்பித்தது. மனிதர்கள் தனது தேவைக்குப் போக எஞ்சிய உணவுப் பொருள்களைக் கால்நடைகளுக்கு உணவாகக் கொடுத்தனர். வேளாண்மை செய்ய கால்நடைகள் உதவின. மேலும், மனிதனுக்கும் கால்நடைகளால் பால், இறைச்சி, தோல், உரோமம், உரம் போன்ற பல்வேறு பயன்கள் கிடைத்தது. காலங்கள் செல்லச் செல்ல வேளாண்மையில் வளர்ச்சி ஏற்பட்டது. 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நிலங்களை உழுவதற்கும் அறுவடை செய்வதற்கும் போர் அடிப்பதற்கும் நீராவி இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மரபியலில் ஏற்பட்ட கண்டுபிடிப்புகளால் கலப்பின, வீரிய ஒட்டு விதைகள் உருவாக்கப்பட்டன.
வேளாண்வகை என்பது ஒருங்கிணைப்புத் தன்மையையும் வேளாண்மையைக் கையாளும் முறையினையும் அங்கு விளையும் பயிரினையும் பொறுத்து வகைப்படுத்தினர். அவை தன்னிறைவு வேளாண்மை, மாற்றிட வேளாண்மை, தீவிர வேளாண்மை, வணிக வேளாண்மை, கலப்புப்பண்ணை வேளாண்மை என்பனவாகும். தன்னிறைவு வேளாண்மை முறையில் விவசாயிகள் தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் தேவையான அளவு பயிர்களை விளைவிப்பர். தன்னிறைவு வேளாண்மை மலைவாழ் மக்களுக்கு சிறிய குழுமங்களால் மேற்கொள்ளப்படும் வேளாண்மை முறையாகும். மாற்றிட வேளாண்மை என்பது இடப்பெயர்வு வேளாண்மை எனப்படும். ஓரிடத்தில் நிலையாக இல்லாமல் சில காலம் கழித்து வேற்றிடம் சென்று பயிரிடுவர்.
தீவிர வேளாண்மை முறையில் நெற்பயிர் அதிகமாக விளைவிக்கப்படும். விளைநிலம் சிறியதாக இருந்தாலும் அவற்றில் விவசாயிகள் தீவிர வேளாண்மை செய்வர். வணிக வேளாண்மை பரந்த வேளாண்மை எனப்படுகிறது. இவ்வகையில், பயிர்கள் அதிகளவில் பயிரிடப்படுகின்றன. பயிரிடுவதற்கு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இம்முறையில் அதிகம் பயிரிடப்படும் பயிராகக் கோதுமை கருதப்படுகிறது. கலப்புப்பண்ணை வேளாண்மை முறையில் பயிர் விளைவித்தல் மற்றும் கால்நடை வளர்த்தல் ஆகிய இரண்டு தொழில்களும் நடைபெறுகின்றன. இதனை ஒருங்கிணைந்த பண்ணை முறை என்றும் அழைப்பர்.
வேளாண்மை வளர்ச்சிக்கு வீரிய விதைகள், தரமான உரம், மண் வளம், போதிய நிதி வசதி, நவீன கருவிகள், எந்திரங்கள், நீர்வளம் முதலியவை அவசியமாகும். இவற்றுள் தலையானது நீர் வசதியாகும். நீர்ப்பாசனம் வேளாண்மைக்கு முதுகெலும்பு போன்றது. உணவுப் பயிராகிய நெல்லுக்கும் பணப்பயிராகிய கரும்புக்கும் அன்னாசி, காய்கறி, போன்ற பயிர்கள் செழிப்பாக வளர்வதற்கு அதிக நீர் தேவைப்படுகிறது. நம் நாட்டில் வற்றாத நதி வளம் மிகுந்துள்ளது. எனினும், நீர் வளத்திற்கு அடிப்படை மழை. மழையை நம்பி விவசாயிகள் விவசாயம் செய்ய வேண்டியுள்ளது. மழை நீரைச் சேமித்துப் பயிர்களுக்குப் பாய்ச்சும் நீர்ப்பாசன முறைகள் இடத்திற்கு இடம் மாறுபடும். அவற்றுள் முக்கியமானவை கிணற்றுப் பாசனம், ஏரிப்பாசனம், கால்வாய்ப் பாசனம் என்பனவாகும். கிணறுகள் மேல்மட்டக் கிணறுகள், குழாய்க் கிணறுகள் என இருவகைப்படும். மேல்மட்ட கிணறுகளை நிலத்தடி நீர் கிடைப்பதைப் பொறுத்து எவ்விடத்திலும் எளிதில் தோண்டிப் பயன்படுத்தலாம். மின்சார வசதியுடன் பயிர்களுக்குக் கிணற்று நீர் இறைக்கப்படுகின்றன. தொடர்ந்து, நிலத்தில் ஆழ்துளை இட்டு இரும்பு அல்லது நெகிழிக் குழாய்களைப் பொருத்தி, எரிவாயு அல்லது மின்சார இறைப்பது குழாய்க் கிணறு ஆகும். நிலத்தடி நீர் அதிகமாக உள்ள இடங்களில் மட்டும் குழாய்க் கிணறுகள் பயன் தரும். எரிப்பாசனம் என்பது தாழ்வான பகுதிகளில், பள்ளங்களின் கரையைப் பலப்படுத்தி மழை நீரைத் தேக்கிப் பாசனத்திற்குப் பயன்படுத்துவதாகும். அடுத்ததாக, கால்வாய்ப்பாசனம். இஃது ஆற்று நீரை முறைப்படுத்தி வாய்க்கால்கள் வழியாக நிலங்களில் பாய்ச்சும் முறை ஆகும்.
சுருங்கக்கூறின், பண்டைக்காலத்தில் வேளாண் தொழில் முதன்மையானதாக இருந்தது. மேலும், நீர்ப்பாசனம், உழவு, எருவிடுதல், சேமிப்பு, விநியோகம் ஆகியவற்றில் முன்னேற்றகரமான செயல் திறன் கொண்டதாகத் திகழ்ந்தது.
Comments