அரசியல் விழிப்புணர்வு
அரசியல் பிழைத்தோருக்கு அறமே கூற்றாகும் என்பது சிலப்பதிகாரத்தின் வாக்கு. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசாங்கம் மக்கள் நலன்கருதி நாட்டை ஆள வேண்டும். மக்களுக்கு ஏற்படும் அல்லல்களைத் துடைத்தொழிப்பதே அரசின் முதல் கடமையாகக் கொள்ள வேண்டும். அந்த நோக்கத்திலிருந்து பிளவுபடும் அரசாங்கம் மக்களால் புறக்கணிக்கப்படும் என்பது தெளிவு. மக்களாட்சியில் நாட்டின் நிதியை நேர்மையாகக் கையாள்வது அவசியம். சுய இலாபத்திற்காக நாட்டின் நிதியைத் தவறாகக் கையாளும் அரசியல் தலைவர்களின் விதியை மாற்றி அமைக்கும் சக்தியை மக்கள் கொண்டுள்ளனர். அதைத்தான் இளங்கோளிவடிகள் அரசியல் பிழைத்தோருக்கு அறமே கூற்றாகும் என்றார். அவ்வாறான தலைவர்கள் காலத்தின் தண்டனையிலிருந்து தப்ப முடியாது. அதைத்தான் விதி வலியது என்பார்கள்.
தவறு இழைக்கும் அரசியல் தலைவர்களை அஞ்சாமல் தட்டிக் கேட்கும் மனத்திட்பத்தை மக்கள் கொண்டிருக்க வேண்டும். இதுதான் தெளிவான அரசியல் விழிப்புணர்வு. அரசியல் விழிப்புணர்வு என்பது தீவிர அரசியலில் ஈடுபடுவது என்று மட்டும் பொருள் கொள்ளக் கூடாது. நாட்டில் நடைபெறும் அரசியல் தொடர்புடைய விஷயங்களை அறிந்து வைத்திருப்பது அரசியல் விழிப்புணர்வின் ஒரு பகுதி. மக்கள் எந்நேரமும் அரசாங்கத்தில் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களின் நடவடிக்கைகளைக் கண்காணித்து அவர்களுக்கான மதிப்பீட்டை அவ்வப்போது வெளிப்படையாக வெளிப்படுத்த வேண்டும்.அப்பொழுதுதான் அரசியல் தலைவர்கள் மக்கள் தங்களைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை உணர்ந்து நேர்வழியில் பயணிப்பதைக் கடமையாகக் கொள்வார்கள்.
அரசியல், பொருளாதாரம், சமூகம், மனித மேம்பாடு ஆகியவற்றுடன் தொடர்புடையது. அரசியல் நிலைத்தன்மையே நாட்டின் பொருளாதாரத்திற்கு உந்து சக்தியாக அமையும். அரசியல் நிலைத்தன்மை உடைய நாடுகள்தான் முதலீட்டாளர்களின் முதமைத் தேர்வாக இருக்கிறது. பல வளங்கள் நிறைந்திருக்கும் அரசியல் நிலத்தன்மையற்ற நாடுகளை முதலீட்டாளர்கள் நாடுவதில்லை. நிலையான அரசியல் முன்னேற்றத்தைக் கொண்டிருக்கும் நாடுகளில் எவ்வளவு பணத்தையும் முதலீட்டாளர்கள் தொழில்துறை, விவசாயத்துறை போன்றவற்றில் முதலீடு செய்வதற்குத் தயாராக உள்ளனர். ஆகவே, நாட்டின் அரசியல் நிலைத்தன்மையைக் கையூட்டு இல்லாத நேர்மையான அரசாங்கத்தால் மட்டுமே உருவாக்க இயலும். கையூட்டு, பதவியைத் தவறாகப் பயன்படுத்தும் அரசாங்கத் பணியாளர்களால் நாட்டின் நிலைத்தனிமை பாதிப்புறும். அவ்வாறு நடக்காமல் பாதுகாக்கும் ஆயுதமாக மக்கள் அரசியல் விழிப்புணர்வு பெற்றிருக்க வேண்டும்.
நம் நாட்டில் அரசாங்கத்தில் அங்கீகாரத்துடன் தமிழர்களைப் பிரதிநிதிக்கும் பல அமைப்புகள் இயங்கி வருகின்றன. அவை அரசாங்கம் சார்ந்த அமைப்புகளாகவும் அரசியல் அமைப்புகளாகவும் இருக்கின்றன. தமிழர் தொடர்புடைய இந்த அமைப்புகளின் நடவடிக்கைகள் நமது நலனைக் காப்பவையாக இருக்கின்றனவா? என்பதை தீர ஆராய முற்படுத்தல் அவசியம். சில அமைப்புகள் வெறும் பெயருக்கு இருந்து கொண்டு அரசாங்க மானியங்களை பெற்றுக் கொண்டு இந்தப் பயனான செயலாற்றுதல் இல்லாமல் இருக்கின்றன. அவற்றின் செயல்பாட்டைத் தோலுரிப்பதற்குத் தமிழர்கள் தயங்கக்கூடாது. அவ்வாறான அமைப்புகளின் மீதான புகாரை அரசாங்கத்திற்குக் கொண்டு செல்வதில் அஞ்சாமல் செயல்பட வேண்டும். தமிழர்களின் பொருளாதார சமூக மேம்பாட்டிற்காக ஒதுக்கப்படும் நிதியைக் கையாடி தன் சுயத்திற்குப் பயன்படுத்தும் தலைவர்களை நீதி முன் நிறுத்துவதற்கு எடுக்கப்படும் முன்னெடுப்புகளுக்கு மக்களின் ஆதரவு இன்றியமையாத ஒன்று. மக்களின் ஒன்றிணைந்த ஆதரவே எந்தவொரு போராட்டத்திற்கும் வெற்றியை நல்கும் என்பது உண்மை.
Comments