பெண் சுதந்திரம்
'நான்கு சுவருக்குள் வாழ நீ ஒரு கைதியா!' என்கிறது ஒரு பாடலும் வரி. எல்லோருக்கும் எங்கும் எப்போதும் சுதந்திரம் என்கிறார் புரட்சிப் பாவலர் பாரதி. மனித வாழ்வில் அடிப்படை உரிமை ஒவ்வொருவரும் கொண்டிருக்கும் சுதந்திரம். எங்கே சுதந்திரம் கட்டுப்படுத்தப்படுகிறதோ, அங்கே போராட்டங்கள் வெடிக்கின்றன. நாட்டின் சுதந்திரம், ஒரு சமூகத்தின் சுதந்திரம், தனிமனித சுதந்திரம் என்று ஒவ்வொரு வகையில் சுதந்திரத்திற்கான போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. இருப்பினும் இந்தப் போராட்டங்களுக்கு ஏதாவது ஒருவகையில் தீர்வுகள் கிடைக்கப் பெறுகின்றன. அனால், பெண்களுக்கான சுதந்திரம் முழுமையாகக் கிடைக்கப் பெற்று விட்டனவா என்றால் அது விடை காண முடியாத வினாவாகவே முடிவு கொள்கிறது.
பெண்களுக்கான சுதந்திரம் இன்றல்ல நேற்றல்ல, அது தொடர் போராட்டமாகவே இருந்து வந்திருக்கிறது. விடுதலை பெற்ற நாட்டில் விடுதலையின்றி வாழ்வது பெண்களுக்குக் கிடைத்த சாபமாக அமைந்திருக்கிறது. இங்கே பெண் சுதந்திரம் என்பது எவ்வகையானது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். காலையில் வீட்டை விட்டுச் சென்று இரவு பன்னிரண்டு மணிக்குத் திரும்பி வருவதற்குச் சுதந்திரம் இருந்தால் அதுதான் பெண் விடுதலை என்று நீங்கள் கருத்துக் கொண்டிருந்தால் அதை மாற்றிக் கொள்ளுதல் நலம். இன்றி பெண்கள் பல வழிகளில் தங்கள் சுதந்திரத்தை நிலை கொள்வதற்குப் போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
பெண்கள் சுதந்திரம் என்பது அவர்களுக்கு எவ்வகையிலும் இழுக்கல் ஏற்படாமல் அமைந்திருப்பதே சிறந்தது. பெண்கள் பேச்சு உரிமைப் பெறுவது சமூகத்திற்கும் நாட்டிற்கும் நன்மை தரும். தங்களின் நேர்மையான கருத்துகளை இந்தச் சமூக கட்டுப்பாடும் இன்றி முன் வைப்பது பெண்களின் சுதந்திரத்தில் அடங்கும். பேச்சுரிமைப் பெற்றால் மட்டும் போதாது; அதை நடைமுறை படுத்தவும் அவர்களுக்குச் சம உரிமைத் தர வேண்டும். பேச்சுரிமைப் பெரும் பெண்கள் எந்தத் தடையுமின்றித் தங்கள் கருத்துகளையும் உள் உணர்வுகளையும் முன் வைக்க இயலும்.
பெண்களுக்கான பேச்சு உரிமைத்தடைகள் வேலை இடங்களில், வீட்டில், பொது அமைப்புகளில் என்று இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இந்தத் தடைகள் அனைத்தும் முழுமையாக நீங்கினால் பெண்கள் தங்கள் கருத்துகளை ஆண்களுக்கு நிகராக முன்வைக்க இயலும். அந்நவீன உலகில் பெண்கள் உயர்கல்விக் கற்று உயரிய பதவிகள் வகிப்பதில் வாய்ப்புகள் பெற்றுள்ளனர். ஆனால், முடிவுகள் எடுக்கும் முழுச் சுதந்திரத்தை அவர்கள் பெற்றுக்கிறார்கள் என்றால் அது பொது விவாதத்திற்கு உரிய விடயமாக உள்ளது.
தங்கள் சுதந்திரத்தின் எல்லை எதுவென்று புரிதல் இல்லாமல் பல பெண்கள் நடந்து கொண்டிருக்கிறார்கள். கவர்ச்சியாக உடை உடுத்துவதில் தங்களின் சுதந்திரம் அடங்கி உள்ளது என்பது சில பெண்களின் எண்ணமாக இருக்கிறது. ஆன் பிள்ளைகள் போல் வெளியில் சுற்றுவதும், வரம்பு முறை இன்றி எல்லோரிடமும் பழகுவதும்தான் தங்களின் சுதந்திரம் என இன்னும் சில பெண்கள் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள். இவ்வாறான சுதந்திரம் பெண் பிள்ளைகளுக்கு இல்லாமல் இருப்பதே ஒரு சமுதாயத்தின் சுதந்திரமாகக் கருதலாம்.
இயற்கை பெண்களுக்கு என்று சில கட்டுப்பாடுகளைக் கொண்டிருக்கிறது. எப்போது இயற்கை பெண்களுக்கு அமைந்த கட்டுப்பாடுகள் மீறப்படுகின்றதோ அப்போதே அவர்கள் பல சிக்கல்களில் மாட்டிக் கொள்கிறார்கள். இதில் பருவமடைந்த பெண் பிள்ளைகள் மிகக் கவனத்துடன் தங்களுக்குக் கொடுக்கப்படும் சுதந்திரத்தைக் கையாள வேண்டுதல் காலத்தின் சட்டம். சுதந்திரத்தின் எல்லையை மீறினால் அதனால் பாதிக்கப்படப்போவது பெண்கள்தான் என்ற புரிதல் அவசியம்.
Comments