மு.கருணாநிதி
மறைந்த திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கலைஞர் மு.கருணாநிதி, 5 முறை தமிழ் நாட்டின் முதலமைச்சராகப் பதவி வகித்த பெருமையைப் பெற்றவர். பன்முகத் தன்மை வாய்ந்த கலைஞர் தமிழ் மொழிக்காக ஆற்றிய பங்கு அளப்பரியது. தன வாழ்நாள் முழுவதும் எழுத்துப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டவர். சமூகப் பார்வையும், அனல் தெறிக்கும் வசனங்களும், அழகு கொஞ்சும் மொழிநடையும் அவருக்கே உரியது. பராசக்தி, மனோகரா, திரும்பிப் பார், பூம்புகார், மந்திரிகுமாரி போன்ற திரைப்படங்கள் அவரது வசனங்களுக்காகவே புகழ் பெற்றவை. நிறைய நாடகங்களை எழுதி சிலவற்றில் நடித்தும் உள்ளார். அவர் எழுதிய திரைப்பாடல்களும் மிகவும் புகழ் பெற்றவை. தனக்கே உரிய புதுமையான நடையில் ஏராளமான கவிதைகளை எழுதி, தமிழ் தமிழ் மொழியை அவர் செம்மைப்படுத்தியிருக்கிறார். கவியரங்கங்களில் பங்கு பெற்று அதன்வழி பல கவியரங்கக் கவிதைகளை வார்த்துத் தந்தவர் கலைஞர். அவர் எழுதிய "உடன்பிறப்பே" என்று தொடங்கும் ஆயிரக்கணக்கான கடிதங்கள் அழகிய மொழி நடைக்காகவும், ஆழ்ந்த கருத்துகளுக்காகவும் போற்றப்படுகின்றன.
சங்கத் தமிழ், குறளோவியம், தொல்காப்பியப் பூங்கா என பல்வேறு பழங்காலத் தமிழ் இலக்கியங்களை எளிமைப்படுத்தி வித்தியாசமான நடையில் படைத்துள்ள கலைஞர், நவீன இலக்கியத்திலும் மிகுந்த ஆளுமை கொண்டவர். ரோமாபுரிப் பாண்டியன், பொன்னர் சங்கர், தென்பாண்டி சிங்கம் போன்ற பல நாவல்களையும், சிறுகதைகளையும், கட்டுரைகளையும் எழுதித் தமிழ் மொழிக்கு அணி சேர்ந்துள்ளார். அடுக்குமொழி மேடைப் பேசிச்சுகளிலும் முத்திரை பதித்தவர் கலைஞர். திருவள்ளுவர் மீது ஆழ்ந்த பக்தி கொண்ட கலைஞர், சென்னையில் வள்ளுவர் கோட்டத்தையும், கன்னியாகுமாரியில், கடல் மீது பிரம்மாண்டமான திருவள்ளுவர் சிலையையும் நிறுவியுள்ளார். தமிழ் மொழிக்கு செம்மொழி அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தவர் கலைஞரே. மலேசியாவில் 1987-இல் நடைபெற்ற 6-வது உலகத்த தமிழாராய்ச்சி மாநாட்டில் கலைஞர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றியிருக்கிறார் என்பதும் வரலாறு சம்பவமாகும்.
Comments