வசிப்பிடத்தில் தொழிற்சாலைகளை நிறுவுவதால் ஏற்படும் விளைவுகள்
இன்றைய இருபத்து ஒன்றாம் நூற்றாண்டில், உலகம் முழுவதும் பல வகைகளில் தொழிற்சாலைகள் உள்ளன. நாம் காலில் அணியும் செருப்பு முதல் தலையில் உள்ள முடியை வெட்ட பயன்படுத்தப்படும் கத்தரிக்கோல் வரை அனைத்தையும் தயாரிக்க தொழிற்சாலை பல இயங்குகின்றன. தொழிற்சாலை என்பது நாம் அனைவரும் பயன்படுத்தும் பொருள்களைத் தயாரிக்கும் ஓர் இடமாகும். அதோடு, இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியினால் ஒவ்வொரு நாளும் கண்டுப்பிடிக்கப்படும் பொருள்களை அதிகளவில் தயாரிக்க தொழிற்சாலைகள் பெரிதும் பங்காற்றுகின்றன. அதோடு, தொழிற்சாலைகளால் நமக்குப் பல விளைவுகள் ஏற்படுகின்றன. இவ்விளைவுகளானது நமது அன்றாட வாழ்வில் பல மாற்றங்களை விளைவிக்கின்றன.
முதல் நன்மையானது, வசிப்பிடத்தில் தொழிற்சாலைகளை நிறுவுவதால் வேலை வாய்ப்பு அதிகரிக்கும். இன்றையக் காலக்கட்டத்தில், இளைஞர்கள் பலர் படித்துவிட்டு வேலை இல்லாமல் திண்டாடுகின்றனர். அதோடு, வேலை இல்லாத இளைஞர்கள் தங்களுக்கு பணத்தேவை இருப்பின் தனது பெற்றோர்களையே நம்பி இருக்கின்றனர். ஆகவே, வசிப்பிடத்தில் தொழிற்சாலைகளை நிறுவுவதால் பலருக்கும் வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கலாம். பலருடைய வேலையில்லா திண்டாட்டத்தையும் குறைக்கலாம்.
அடுத்தது, வசிப்பிடத்தில் தொழிற்சாலைகளை நிறுவுவதால் நேர விரையத்தைத் தவிர்க்கலாம். அதாவது, சிலர் வேலைக்குப் பல கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்துச் செல்கின்றனர். இதனால், நேரம் விரையமடைவதோடு பெட்ரோலும் விரையமடைகிறது. வசிப்பிடத்தில் தொழிற்சாலைகளை நிறுவுவதால் நேரத்தை சிக்கனம் செய்யலாம். அதோடு, வேலைக்குச் செல்வதற்கு அதிகாலையில் துயிலெழத் தேவையில்லை. அதிகாலையில் எழுவதால் தூக்கமின்மை ஏற்படும். வசிப்பிடத்தில் இருக்கும் தொழிற்சாலைக்கு வேலைக்குச் செல்வதால் இது போன்ற சிக்கல்களை எளிதில் களையலாம்.
அதனை அடுத்து, வசிப்பிடத்தில் தொழிற்சாலைகளை நிறுவுவதால் குடும்ப வருமானம் உயரும். இன்றைய இருபத்து ஒன்றாம் நூற்றாண்டில், ஒரு குடும்பத்தில் ஒருவரின் வருமானம் கட்டுப்படுவதில்லை. ஒரு குடும்பத்தில் மற்றோருவரும் வேலைக்குச் செல்கையில் குடும்ப வருமானம் உயரும். குடும்ப செலவுகளை எளிதாகவும் சிக்கனமாகவும் சந்தோஷமாகவும் கையாளலாம். அதோடு மட்டுமல்லாமல், குடும்ப செலவுகளைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம். எனவே, வசிப்பிடத்தில் தொழிற்சாலைகளை நிறுவுவதால் குடும்ப வருமானம் உயரும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
வசிப்பிடத்தில் தொழிற்சாலைகளை நிறுவுவதால் நன்மைகள் மட்டுமின்றி சில தீமைகளும் விளைகின்றன. இத்தொழிற்சாலைகளினால் , தூய்மைக்கேடு ஏற்படும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. இன்றையக் காலக்கட்டத்தில், தொழிற்சாலைகள் ஆற்றின் ஓரம் நிறுவப்படுகிறது. தொழிற்சாலையிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் ஆற்றில் விடப்படுகிறது. இதனால், நீர்தூய்மைக்கேடு ஏற்படும். அதோடு, தொழிற்சாலையிலிருந்து வெளியேற்றப்படும் புகைகள் காற்றில் கலந்து காற்றுத் தூய்மைக்கேட்டை ஏற்படுத்தும்.
அடுத்ததாக, வசிப்பிடத்தில் தொழிற்சாலைகளை நிறுவுவதால் நமக்குத் பல நோய்கள் ஏற்படும். நாம் உண்ணும் சுவையான உணவு முதல் கடையில் விற்கப்படும் குளிர்ச்சாதனங்கள் வரை அனைத்தும் தொழிற்சாலையில் தயாரிக்கப்படுவதாகும். தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் உணவு மற்றும் பானங்களில், நம் உடலுக்குக் கேடு விளைவிக்கும் இரசாயனங்கள் பல கலக்கப்படுகின்றன. இதனால், உடல் ஆரோக்கியம் குன்றி பல நோய்களை எதிர்நோக்குகின்றது. அதோடு, குணப்படுத்த முடியாத சில நோய்களால் பலர் மரணத்தை எதிர்நோக்குகின்றனர்.
இறுதியாக, வசிப்பிடத்தில் தொழிற்சாலைகளை நிறுவுவதால் நமக்குப் பல நன்மைகளும் தீமைகளும் விளைகின்றன. தொழிற்சாலைகளால் ஏற்படும் விளைவுகளில் நன்மைகளை மட்டும் நாம் பெற்றுக் கொள்ள வேண்டும். தீமைகள் ஏற்படுமாயின், வெள்ளம் வருமுன் அணை போடு என்பது போல் நாம் பாதுகாப்பாகவே இருக்க வேண்டும்.
Comments