விளையாட்டு




    ஓய்வாக இருக்கும் நேரத்தில் சுறுசுறுப்பாக இயங்கவே விளையாட்டை விளையாடுகிறோம். தனி மனிதராக மட்டுமல்லாமல் இரட்டையராகவோ அல்லது பலரும் சேர்ந்து ஒன்றாகவோ எப்படி வேண்டுமானாலும் விளையாடலாம். பம்பரம், பட்டம்விடுதல் போன்றவை ஒற்றையராக விளையாடும் விளையாட் டுகளாகும். பல்லாங்குழி, ஆடு புலி போன்ற விளையாட்டுகள் இரட்டையராக விளையாடும் விளையாட்டுகளாகும். பலரும் சேர்ந்து விளையாடும் விளையாட்டுகள் பல உள்ளன. காற்பந்து, கூடைப்பந்து, கபடி போன்றவை குழு விளையாட்டுகளாகும். பல பிரிவுகளாகப் பிரிக்கப்படும் விளையாட்டினால் பலரும் ஈர்க்கப்பட்டுள்ளனர்.
    
    விளையாட்டுகளில் ஈடுபடுவதனால் நாம் மன அமைதியைப் பெறலாம் என்பது திண்ணம். இன்றைய உலகப் போக்கில் பலருக்கும் பல பிரச்சனைகளால் கவலை ஏற்படுகிறது. இக்கவலையானது, மன உளைச்சலுக்கும் மனக்கவலைக்கும் வித்திடுகிறது. மன உளைச்சலின் காரணமாக மன நோயாளியாக மாறியவர்கள் சிலர் சாலை ஓரங்களில் செல்வதை நாம் பார்த்திருப்போம். நமக்குத் தெரியாமல் பலரும் மனநல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதோடு மட்டுமின்றி, மன உளைச்சல் ஒரு மனிதனின் உடல் நலத்திற்கும் கேடு விளைவிக்கும் என்பதை ஆணித்தரமாகக் கூறலாம். ஆகவே, விளையாட்டுகளில் ஈடுபடுவதனால் மனக்கவலையும் மன உளைச்சலையும் போக்கி, மன நிம்மதியைப் பெற்று சந்தோஷமாக வாழலாம் என்பதில் சிறிதும் ஐயமில்லை. 
    
    அதோடு, விளையாடுவதனால் நமது உடல் எடை குறையும். இந்த நவீன உலகில்,  எடையை அதிகரிப்பதற்கே பல விரைவு உணவுகள் கண்டுப்பிடிக்கப்பட்டும் தயாரிக்கப்படும் வருகின்றன. பொறித்த கோழி ( கே. எஃப். சி), பீட்சா, பர்கர் போன்ற உணவுகள் உடல் எடையை அதிகரிக்கும் தன்மையைக் கொண்டுள்ளன. மேலும், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒவ்வொரு வேலையைச் செய்வதற்கும் ஒரு இயந்திரத்தைக் கொண்டுள்ளனர். சிலர் வீட்டு வேலைகளைச் செய்வதற்காகவே பணியாளர் ஒருவர்  அல்லது இருவரை  வேலைக்கு வைத்துள்ளனர். இதனால், சோம்பல் அதிகரித்து பருமனானவரே அதிகம். சோம்பலைத் தவிர்த்து சுறுசுறுப்புடன் செயல்படவும் உடல் எடையைக் குறைப்பதற்கும் விளையாட்டுகள் பெரிதும் உதவுகின்றன.

    அதனையடுத்து, விளையாடுவதனால் நாம் ஒற்றுமையை வலுப்படுத்தலாம். மூவின மக்கள் வாழும் மலேசிய திருநாட்டில் எவரும் எந்த விளையாட்டையும் இன பாகுபாடின்றி விளையாடலாம். இன்றைய உலக விரைவில் காரணமாக ஒருவர் மற்றொருவரோடு கூடிப் பேசுவதற்கும் நேரம் செலவு செய்வதற்கும் வழியில்லை. மற்றொருவரோடு கலந்து பேசுவதற்கே தயக்கம் தலை தூக்கி நிற்கிறது. அது மட்டுமல்லாது, பலருக்கு தன் குடும்பத்திற்கு செலவு செய்வதற்கே நேரம் இல்லை. பற்றாக்குறைக்கு, புத்துணர்வின்மையின் காரணமாகப் பலரும் சண்டையிட்டுக் கொள்கின்றனர். ஆகவே, மூவின மக்களுடன் விளையாடுவதனால் ஒற்றுமையை வளர்த்துக் கொண்டு வாழ்க்கையைச் செம்மையாக வாழலாம்.

    அடுத்ததாக, விளையாடுவதனால் இரத்தம் சீரோட்டமாக இருக்கும் என்பதை அறிந்தவர் சிலரே. விளையாட்டின்போது சுறுசுறுப்பாக இயங்குவதனால் நம் உடலில் உள்ள இரத்தம் வேகமாகவும் சீராகவும் நகரும். இதனால், நம் தோலிலிருந்து வியர்வை வெளியாகும். அதோடு, மற்ற இரண்டு கழிவுப் பொருளான சிறுநீரையும் மலத்தையும் எந்தவித தடையுமின்றி செவ்வனே வெளியாற்றலாம். நம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளே கழிவுப் பொருட்களாக வெளியேற்றப்படுகிறது. இதனால், எந்தவொரு நோயுமின்றி சீரும் சிறப்புமாக வாழலாம். எனவே, விளையாடுவதனால் உடலில் உள்ள இரத்தம் சீரோட்டமாக அமைவதோடு உடல் நலமும் வலுப்பெறும் என்பது உறுதி.

    அதற்கு அடுத்ததாக, விளையாட்டுகளில் ஈடுபடுவதனால் நாம் புகழ்பெற்ற மனிதனாகத் திகழலாம். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக இவ்வுலகில் எந்த மூலை முடுக்கில் இருந்தாலும் யார் வேண்டுமானாலும் சாதனை செய்யலாம். பள்ளியைப் பிரதிநிதித்து விளையாடி வென்று வட்டார ரீதியிலும் மாநில ரீதியிலும் விளையாடி வெற்றி பெறலாம். இவ்வெற்றியானது ஒரு தனி மனிதனை நாட்டையே பிரதிநிதித்து விளையாடச் செய்யும். நாட்டைப் பிரதிநிதித்து விளையாடுவதனால் பலருக்கும் நம்மைப் பற்றி தெரியும். இதற்கு லீ சோங் வேய் சிறந்த உதாரணமாவார். அவரது பெயரைக் கூறினாலே அவர் மலேசிய நாட்டைச் சேர்ந்த சிறந்த பூப்பந்து விளையாட்டாளர் என உலக மக்கள் அனைவருக்கும் தெரியும். ஒரு தனி மனிதனை உலகம் போற்றும் மனிதனாக மாற்றும் திறமை விளையாட்டிற்கு உள்ளது.

     ஆகவே, விளையாட்டுகளில் ஈடுபடுவதனால் நமக்குப் பல நன்மைகள் ஏற்படுகின்றன என்பதில் சிறிதும் ஐயமில்லை. பிள்ளைகளை விளையாட்டுகளில் ஈடுபடச் செய்வது பெற்றோர்களின் தலையாய கடமையாகும். பிள்ளைகளிடத்தில் பெற்றோர்களால் முடியாதது ஏதுமில்லை. அதோடு, தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் விளையாட்டு நிகழ்ச்சிகளைப் பார்க்கவும் நாளிதழில் அச்சிடப்படும் விளையாட்டுச் செய்திகளைப் படிப்பதும் ஒவ்வொரு பிள்ளையின் கடமையாகும். அதைப் பெற்றோர்கள் அதட்டாமல் ஆதரிக்க வேண்டும். அதோடு, அரசாங்கத்தினர் ஒவ்வொரு மாதமும் ஒரு விளையாட்டை மாநில அளவில் நடத்த வேண்டும். சிறியவர்கள் மட்டுமின்றி பெரியவர்களுக்கும் விளையாட்டை நடத்த வேண்டும். எனவே, நாம் பல விளையாட்டுகளில் ஆர்வமுடன் செயல்பட்டு நமக்கும் வீட்டுக்கும் நாட்டுக்கும் நன்மையை ஈட்ட வேண்டும்.

Comments

Popular posts from this blog

கடல் - கட்டுரை (Kadal - katturai)

காடுகளை அழிப்பதனால் ஏற்படும் விளைவுகளை விவாதித்து எழுதுக.

பணி ஓய்வு உரை (pani ooyvu urai)